தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் இ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்
தமிழில் சுட்டெழுத்துக்கள் மூன்று. அவற்றுள் இகரமும் ஒன்று. இது அண்மைச் சுட்டைக் குறிக்கப் பயன்படுகின்றது[2]. எடுத்துக்காட்டாக இவன், இது, இங்கே போன்ற அண்மைச் சுட்டுச் சொற்களில் இ முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் இ சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. இ புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும்[3]. இச்சிறுவன் (இ + சிறுவன்), இக்கோயில் (இ + கோயில்) போன்ற சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
[தொகு] இனவெழுத்துக்கள்
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.
இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது இ, ஈ வுக்கு இன எழுத்தாக அமையும்.
பொருள் அடிப்படையில் அ, ஆ. ஈ என்பவை இ இன் இன எழுத்தாக அமைவன.
வடிவ அடிப்படையில், அ, உ, ஊ என்பன இ வுக்கு இன எழுத்துக்கள் எனவும் கூறப்படுகின்றது